தமிழ்நாட்டில் தற்போது அமலில் இருக்கும் CPS திட்டம் மற்றும் புதிதாகக் கொண்டுவரப்பட்ட TAPS திட்டங்களுக்குப் பதிலாக பழைய பென்சன் திட்டத்தை ஏன் மீண்டும் கொண்டுவர முடியாது?

பழைய ஓய்வூதியத் திட்டத்தால் அரசுக்கு நிதிச் செலவு அதிகரிக்குமா?
செலவு அதிகரிக்காது. இந்தியா விடுதலை பெற்ற பின்பு ஒரு சில பிரிவினருக்கு மட்டுமே ஓய்வூதியம் இருந்தது. 95 சதவீதத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. PROVIDENT FUND திட்டம் தான் இருந்தது. அன்றைய PROVIDENT FUND ( வருங்கால வைப்பு நிதி திட்டம்) திட்டத்தின் நவீன பெயர் தான் CPS & TAPS திட்டம்.
PF திட்டடத்தில் அரசு பங்கீடு 12 சதவீதம், அரசு ஊழியர் பங்கீடு 12 சதவீதம் என்று இருந்தது. PF திட்டத்தில் கடன் வாங்கிக் கொள்ளலாம். ஓய்வுக்கு பின்னர் மொத்தமாக சேமிப்புத் தொகை வழங்கப்பட்டு வந்தது. இத்திட்டம் தொடர்பாக மத்திய அரசிடம் மாற்று சிந்தனை உருவானது. அரசுப் பணியில் சேரும் ஒருவர் குறைந்தது 30 ஆண்டுகள் (360 மாதம் ) பணிபுரிவார். பணியில் சேரும் ஒரு அரசு ஊழியருக்கு ஒவ்வொரு மாதமும் அரசின் பங்கை செலுத்துவதால் வரும் தொடர் செலவீனம் மற்றும் வட்டித் தொகையை விட, ஓய்வுக்கு பின்பு மாத ஓய்வூதியம் வழங்குவது அரசுக்கு லாபகரமானது என்று மறு சிந்தனை உருவானது.
அரசு செலுத்த வேண்டிய மாத சந்தா ஓய்வுக்கு பின் மாத ஓய்வூதியமாகவும், அரசு ஊழியர்களின் பங்கீடு என்பது GENERAL PROVIDENT FUND ஆகவும் மாற்றப்பட்டது. அதே திசை வழியில் தான், ஓய்வு பெறும் வயது 58இல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது. ஓய்வு பெறும் வயதை 58இல் இருந்து 60 ஆக உயர்ந்துவதன் மூலம் ஓய்வூதியப் பலன்களுக்கான பணத்தை இரண்டு ஆண்டுகள் அரசு செலவு செய்யாமல் தள்ளிப் போட முடியும்.
செலவைத் தள்ளி போடுவதன் மூலம் இப்பணத்தை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்த முடியும் என்பதால்தான் தமிழக அரசு ஒய்வு பெறும் வயதை 58லிருந்து 60 ஆக உயர்த்தியது. தொடர் செலவீனத்தை கணக்கீட்டால் PF திட்டத்தை விட பழைய ஓய்வூதியத் திட்டம் தான் அரசுக்கு பலன் தரும் திட்டம். CPS திட்டத்தை விட பழைய ஓய்வூதியத் திட்டத்தில் தான் அரசுக்கு நிதி செலவு குறைவுதான்.
CPS & TAPS திட்டத்தால் யாருக்கு லாபம்.?
அரசுக்கும் பலன் இல்லை. அரசு ஊழியர்களுக்கும் பலன் இல்லை. பெரு முதலாளிகளுக்கு மட்டுமே CPS &TAPS திட்டத்தால் பலன். தமிழகம் தவிர்த்த பிற மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசும் NPS திட்டத்தில் ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையம் (PFRDA) மூலம் அரசின் பங்கும், அரசு ஊழியர் பங்கும் பங்குச் சந்தையில் முதலீடு செய்து வருகிறது. அரசின் பங்கீடும், அரசு ஊழியர்கள் பங்கீடும் சேர்த்து 30.9.25 வரை ரூ. 11,98,400.85 கோடி PFRDA மூலம் பங்கு சந்தையில் முதலீடு செய்யபட்டுள்ளது. பங்கு சந்தையில் முதலீடு செய்யப்படும் NPS பணத்தை பெரு முதலாளிகள் தங்கள் வணிகத்திற்கு பயன்படுத்தி வருகிறார்கள்.
அரசுக்கு பலன் இல்லாத CPS மற்றும் TAPS திட்டத்தை ஏன் அமல்படுத்துகிறார்கள்?
கடன் கொடுக்கும் உலக வங்கியின் நிபந்தனை அது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த நிதி நிலை தடை இல்லை. கொள்கையில் மன உறுதி வேண்டும். மனம் வைத்தாலே சிபிஎஸ் திட்டத்தை ஒழித்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தைக் கொண்டுவரலாம் என்று CPS ஒழிப்பு இயக்க மாநில மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



