பழனி நில மோசடி விவகாரம் : 3 பேர் கைது!


பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள 1.4 ஏக்கர் நிலத்தை, மோசடியாகப் பதிவு செய்யப்பட்டது. அதாவது, கடந்த 6ஆம் தேதி வெள்ளத்துரை, சேதுபதி ஆகிய இருவரின் பெயரில் அந்த இடம் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட இந்த நிலத்தை வெறும் 2 கோடிக்குக் கணக்கு கிரயம் செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாகப் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் கோயில் சொத்து என்பதை மறைத்து தனிநபர்களுக்குக் கிரயம் செய்து மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. 

இதையடுத்து இந்த மோசடிக்கு உறுதுணையாக இருந்த பழனி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகிய 2 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த முறைகேடு தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 14 நாட்களாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் இந்த நிலமோசடி வழக்கில் வெள்ளத்துரை, அன்வர்தீன் மற்றும் முருகதாஸ் என்ற மூவரையும் சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதாவது திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகாவைச் சேர்ந்த காளிமுத்துவின் மகன் வெள்ளத்துரை தான், கோயில் நிலத்தை வாங்கியவர் ஆவார். மேலும், பழனி ஏ.சி.சி. சாலையைச் சேர்ந்த அமீது என்பவரின் மகன் அன்வர்தீன், இந்த பரிவர்த்தனைக்கு உடந்தையாக செயல்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

palani-temple-land

அதேபோன்று, விழுப்புரம் மாவட்டம் சாலமேடு காமராஜ் நகரைச் சேர்ந்த தண்டபாணி ஐயா என்பவரின் மகன் முருகதாஸ் என்பவர், அ நிலத்தை விற்றதாகக் கூறப்படுகிறது. எனவே நிலத்தை விற்ற முருகதாஸ், வாங்கியதாகக் கூறப்படும் வெள்ளத்துரை மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அன்வர்தீன் ஆகிய மூவரும்காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்3  மீதும் குற்றச் சதியில் ஈடுபடுதல், போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிபிசிஐடி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



Source link

Scroll to Top