
பட மூலாதாரம், TN assembly
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)
சென்னை பரந்தூரில் புதிய விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை 2 நாள் விடுமுறைக்குப் பிறகு கூடியதும், மறைந்த நடிகை சௌகார் ஜானகிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்புகளை வெளியிட்டார்.
அவர் பேசுகையில், “சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையம் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தால் இயக்கப்படுகிறது. இது இப்போது ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக உள்ளது. வளர்ந்து வரும் சென்னை மாநகரின் தேவைகள், தொழில் வளர்ச்சி மற்றும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டும் சரக்கு போக்குவரத்தை அதிகரிக்கும் வகையிலும் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான தேவை ஏற்பட்டுள்ளது. புதிய விமான நிலையத்தை அமைப்பதற்காக தேர்வு செய்யப்படும் இடம் பெரியளவில் விவசாயிகளை சந்திக்காத வகையிலும் அதிகளவில் குடியிருப்புகளை அகற்றாத வகையிலும் அமைய வேண்டும்.
ஆனால் முந்தைய அரசு விவசாயிகளை அதிகம் பாதிக்கும் வகையிலும் குடியிருப்புகளை அகற்றும் வகையிலும் புதிய விமான நிலையத்தை அமைக்க முயற்சிகளை மேற்கொண்டது. இதனை எதிர்த்து ஏகனாபுரம் மற்றும் பிற கிராம மக்கள் நடத்திய போராட்டங்களை அறிந்து நான் 20-01-2026 அன்று அப்பகுதிக்குச் சென்று அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்து பின்வரும் அறிவிப்புகளை வெளியிட்டேன்.
பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 12 கிராமங்களில் அமையவிருக்கும் விமான நிலையத்தை எதிர்த்து போராடும் மக்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன். நீண்ட நாட்களாக இந்த திட்டத்தை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு என் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயிகளே நாட்டின் முதுகெலும்பு, இந்த விவசாய நிலத்தை பாதுகாக்க இந்த மக்கள் போராடி வருகிறார்கள்.
விக்கிரவாண்டியில் 2024-ஆம் ஆண்டு அக்டோரில் நடந்த பொதுக்கூட்டத்திலேயே பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைய எதிர்ப்பு தெரிவித்திருக்கிறேன். தொழில் வளர்ச்சி மற்றும் அதில் விமான நிலையங்களின் பங்கு பற்றி நான் நன்கறிவேன். அதற்கான என் முழு ஆதரவும் உண்டு. ஆனால் ‘பரந்தூரில் இந்த திட்டம் அமையக் கூடாது. இந்த திட்டம் குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறைவான விவசாய நிலங்களை எடுக்கும் வகையிலும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையிலும் மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும்’ என தெரிவித்திருந்தேன்.
மக்கள் மத்தியில் நான் அன்றே தெரிவித்ததை நிறைவேற்றும் பொருட்டு துறை அதிகாரிகளிடமும் வல்லுநர்களிடமும் விரிவாக ஆலோசனை நடத்தினேன். நான் ஏற்கனவே உறுதியளித்தபடி, பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் இந்த அரசால் கைவிடப்படும்.
துறைசார் வல்லுநர்கள், கல்வியாளர்களுடன் கலந்தாலோசித்து விவசாய நிலங்களை பாதிக்காதவாறு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பொருத்தமான சில மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த இடங்களில் தொழில்நுட்ப ரீதியான சாத்தியங்களை சம்பந்தப்பட்ட சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் ஆய்வு மேற்கொண்டு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இடம் இறுதி செய்யப்படும்.
இதற்கிடையே, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்து அதன் வடமேற்குப் பகுதியில் ஆண்டுக்கு கூடுதலாக 20 மில்லியன் பயணிகளை கையாளும் வகையில் 5-வது முனையத்தை அமைக்க ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவுடன் இணைந்து அணுகுசாலை மற்றும் மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தற்போது நடக்கும் 3வது முனைய கட்டுமானப் பணிகள் முடிந்த பிறகு மீனம்பாக்கம் விமான நிலையம் ஆண்டுக்கு 35 மில்லியன் பயணிகளை கையாளக்கூடியதாக இருக்கும். ஐந்தாவது முனையம் அமைந்த பிறகு ஆண்டுக்கு 55 மில்லியன் பயணிகளை கையாளக்கூடியதாக இந்த விமான நிலையம் இருக்கும். இதன் மூலம் சென்னை விமான நிலையத்தின் சேவைகள் மேம்படுத்தப்படுவதோடு, புதிய விமான நிலையம் அமைக்கப்படும் வரை பயணிகளின் போக்குவரத்து தேவை பூர்த்தி செய்யப்படும்.” என்று அறிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு


