தாராபுரத்தில் முதல்வர் விஜய் இன்று ரோடு ஷோ!


தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை இன்று (அக்டோபர் 4) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு, இறுதிக் கட்ட வாக்குச் சேகரிப்பில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  அந்த வகையில் தமிழக முதலமைச்சர் விஜய், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளரை ஆதரித்து இன்று ரோடு ஷோ மூலம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார். 

அதன்படி ருத்ராவதி பகுதியில் தொடங்கி குண்டடம், தாராபுரம், மூலனூர் வழியாகப் பயணித்து பல்வேறு பகுதிகளில் அவர் வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்குச் சேகரிக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காக  முதலமைச்சர் விஜய்  சென்னையில் இருந்து கோவைக்கு விமானம்  மூலம் செல்கிறார். அதன் பின்னர் கோவையிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாராபுரத்திற்கு முதலமைச்சர் விஜய் சாலை மார்க்கமாகச் செல்வதைத் தவிர்த்து, ஹெலிகாப்டர் மூலம் நேரடியாகச் செல்வதற்குத் தற்போது சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

பரப்புரை நிறைவடைய இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், முதலமைச்சர் விஜய்யின் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரப்புரை நிறைவடைவதை ஒட்டி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தேர்தல் விதிமுறைகளைத் தீவிரமாகப் பின்பற்றுமாறு தேர்தல் ஆணையம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.



Source link

Scroll to Top