தமிழக சட்டமன்ற பேரவையின் தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அது மீதான பொது விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கூட்டத்தொடரின் 7ஆம் நாளான இன்று (12-08-26) நிதிநிலை மற்றும் வேளாண் அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.
அதன் பின்பு அந்த தீர்மானத்தின் மீது பொது விவாதம் நடத்தப்பட்டு குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த குரல் வாக்கெடுப்பில், திமுக, காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவிக்க, அதிமுக, பா.ஜ.க, பா.ம.க ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும், அந்த தீர்மானத்திற்கு ஆதரவாக பெரும்பான்மை எண்ணிக்கை இருந்ததால் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் வேளாண் துறை அமைச்சர் வினோத் பதில் அளித்துப் பேசும் போது முதல்வர் விஜய்யை புகழ்ந்துப் பேசினார். அதில் அவர் பேசியதாவது, “வேளாண் பட்ஜெட்டுக்கு விவசாயிகள் மத்தியில் கிடைத்த வரவேற்பை பொறுத்துக்கொள்ள முடியாமல் சில கட்சிகள் உள்பட முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்று பட்ஜெட்டாக இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது என்று கூறினார்கள். இது வெற்று பட்ஜெட் இல்லை, தமிழக விவசாயிகள் போற்றும் வெற்றி பட்ஜெட்டை எங்கள் முதல்வர் கொடுத்துள்ளார்.
பிறரின் தவறுகளை குறைகூறுவதற்கு முன் நம் சொந்த தவறுகளை சரி செய்ய வேண்டும் என்ற திருவள்ளுரின் வாக்கினை குறை கூறுபவர்களுக்கு நினைவுபடுத்தி, ஆட்சி பொறுப்பேற்றவுடன் சில எதிர்கட்சியினர் இவர்களுக்கு என்ன ஆட்சி செய்ய தெரியும் என்று கேள்வி செய்தார்கள். இன்று அவர்களே பார்த்து வியக்கும் வண்ணம் ஒரு சிறந்த லஞ்ச லாவண்யம் இல்லாத ஒரு ஆட்சியை கிட்டத்தட்ட 100 நாட்களாக முதலமைச்சர் வழங்கி வருகிறார். தமிழகத்தின் இதயம் எங்கே இருக்கிறது என்றால் கிராமபுரங்களில் வாழ்ந்து வரும் நமது விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களில் இருக்கின்றது என்று நன்கு உணர்ந்த முதலமைச்சர் மீண்டும் பிறந்தால் விவசாயியின் மகனாகதான் பிறக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். ஆனால் அவர் இன்று விவசாயிகள் மீது காட்டும் அக்கறையின் காரணமாக இன்று அனைத்து விவசாய குடும்பங்களிலும் ஒரே மகனாக வாழ ஆரம்பித்துவிட்டார்.
எங்கள் தளபதியிடம் உங்கள் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. விவசாயிகள் இந்த வேளாண் பட்ஜட்டை வரவேற்று கொண்டாடிதான் வருகின்றனர். ஒவ்வொரு தாக்குதலும் எங்களை ஆவேசப்படுத்தும் அரசியல்படுத்தும் ஒருபோதும் அச்சப்படுத்தாது என்ற புரட்சியாளர் அம்பேத்கரின் வரிகளின் வடிவம்தான் எங்கள் முதல்வர். அனைவருக்கும் சூரியனால் உயர்த்தது, ஆனால் எங்கள் முதல்வர் வந்த பிறகு சூரியனுக்கே வியர்த்தது” என்று கூறி அமர்ந்தார். இதற்கு பதிலடி கொடுத்த முன்னாள் முதல்வரும் திமுக எம்.எல்.ஏவுமான ஓ.பன்னீர்செல்வம், “வேளாண்மை துறை அமைச்சர் நீண்ட நெடிய விளக்கத்தை தந்தார், நாங்கள் பொறுமையோடு கேட்டு கொண்டிருந்தோம். அவருடைய பதிலுரையின் முடிவுரையில் சூரியனுக்கே வியர்த்தது என்ற கருத்தை சொல்லிருக்கிறார். இதுவரை யாருமே நெருங்க முடியாத நிலையில் தான் சூரியன் இருக்கிறது. எத்தனையோ விஞ்ஞானிகள் முயற்சி செய்தும், அங்கே ஏவுகணைகளை செலுத்த முடியவில்லை” என்றி கூற அனைத்து திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் ஆரவாரத்துடன் கைத் தட்டினர்.


