கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. 5 ஏக்கர் நிலம் கடன் ரத்து உட்பட தலைவர்களின் பிராமிஸ் சாத்தியமா | Cooperative Bank Crop Loan Waiver! Debt cancellation for 5 acre Land! Are leaders’ promises feasible?


Chennai

oi-Hema Vandhana

சென்னை: தமிழக தேர்தல் களத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி என்ற அஸ்திரத்தை எடப்பாடி பழனிசாமி மற்றும் விஜய் ஆகியோர் கையில் எடுத்துள்ள நிலையில், இந்த அதிரடி அறிவிப்புகள் விவசாயிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.. இந்த வாக்குறுதிகளை முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரங்களையும் கட்சி தலைவர்கள் முன்னெடுத்து வருகிறார்கள்.

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் விவசாயிகளைக் கவரும் வகையில் பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றன.

Cooperative Bank

குறிப்பாக, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வது குறித்த அறிவிப்புகள் விவாதப் பொருளாக மாறியுள்ளன. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் தொடங்கி, மாநில அளவிலான தேர்தல் அறிக்கைகள் வரை “கடன் தள்ளுபடி” என்பதே பிரதான முழக்கமாக ஒலிக்கிறது.

கூட்டுறவு வங்கி பயிர் கடன் தள்ளுபடி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்கள் அனைத்தும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தள்ளுபடி செய்யப்படும் என உறுதியளித்துள்ளார்.

இதனை முன்வைத்து விக்கிரவாண்டி தொகுதி கோலியனூர் ஒன்றியத்தில் பாமக வேட்பாளர் சிவகுமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆலத்தூர், விராட்டிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பேசுகையில், கடந்த திமுக ஆட்சியில் விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டதாகவும், மீண்டும் அதிமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் மட்டுமே விவசாயிகளின் குறைகள் தீர்க்கப்பட்டு கடன் சுமை குறையும். விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

5 ஏக்கர் நிலம்

மறுபுறம், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்காகப் புதிய வகைப்பாட்டை முன்வைத்துள்ளார். 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்றும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ளவர்களுக்கு 50 சதவீத கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

நிலத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்த வாக்குறுதி விவசாயிகள் மத்தியில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.

பயிர்க்கடன் தள்ளுபடி சாத்தியமா?

பயிர்க்கடன் தள்ளுபடி என்பது நிர்வாக ரீதியாக சாத்தியமான ஒன்றுதான் என்றாலும், அது மாநில அரசின் நிதிநிலை அறிக்கையைப் பெருமளவு பாதிக்கும் காரணியாகும்.

ஏற்கனவே பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில் இருக்கும் ஒரு மாநில அரசு, மீண்டும் பல ஆயிரம் கோடிகளைத் தள்ளுபடி செய்யும்போது நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும். எனினும், கடந்த காலங்களில் பலமுறை இத்தகைய தள்ளுபடிகள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன. கூட்டுறவு வங்கிகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இதற்கான தொகையை அரசு வங்கிகளுக்கு ஈடு செய்யும் பட்சத்தில் இது நடைமுறை சாத்தியமே.

எதிர்பார்ப்பில் விவசாயிகள்

யார் வெற்றி பெற்று வந்து பயிர்க்கடனை தள்ளுபடி செய்தாலும், உடனடி பலனாக விவசாயிகளின் தலையிலிருந்த கடன் சுமை நீங்கும். இது அவர்கள் அடுத்த பருவ சாகுபடியைத் தடையின்றித் தொடங்க உதவும். குறிப்பாக, இயற்கைச் சீற்றங்கள் மற்றும் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இது ஒரு மிகப்பெரிய ஆறுதலாக அமையும்.

ஆனால் அதே சமயம் முறையாகக் கடனைத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு இது ஏமாற்றத்தைத் தரக்கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது. மேலும், தள்ளுபடி என்பது ஒரு தற்காலிகத் தீர்வே தவிர, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு முறையான விலை கிடைப்பதும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுமே அவர்களின் வாழ்வாதாரத்தை நிரந்தரமாக உயர்த்தும் என்பது பொருளாதார வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது. என்ன நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!



Source link

Scroll to Top