தமிழ்நாட்டில் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் சட்டப்பேரவையில் பரபரப்பான விவாதத்தை ஏற்படுத்தியது. கார் தேவையில்லை என திமுக எம்.எல்.ஏ.க்கள் கூறிய நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய உறுப்பினர்களுக்கு மட்டும் கார் வழங்கலாம் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
‘திமுகவின் 59 எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் வேண்டாம்’ – எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி
சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக முதலமைச்சர் தொடர்ந்து கூறி வருவதை சுட்டிக்காட்டினார்.
அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் வழங்குவதற்குப் பதிலாக, தேர்தல் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பொருளாதார விவரங்களின் அடிப்படையில் பொருளாதாரத்தில் நலிவடைந்த உறுப்பினர்களுக்கு மட்டும் கார் வழங்கலாம் என அவர் தெரிவித்தார்.
மேலும், “திமுகவின் 59 எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் வேண்டாம்” என்றும் உதயநிதி கூறினார்.
‘எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் தேவை’ – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சட்டப்பேரவையில் ஏழ்மை நிலையில் உள்ள எம்.எல்.ஏ.க்களும் இருப்பதாக தெரிவித்தார்.
விசிகவைச் சேர்ந்த ஓர் உறுப்பினர் பேருந்தில்தான் சென்னைக்கு வந்து செல்வதாகவும், அனைவரும் சமம் என்பதால்தான் பொதுவாக அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் வழங்க முதலமைச்சர் அறிவித்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், ஏற்கெனவே கார் வைத்திருப்பவர்கள் புதிய காருக்கு விண்ணப்பிக்க மாட்டார்கள் என்றும், “கார் என்பது ஆடம்பரம் இல்லை; மக்களை சந்திப்பதற்கு தேவையானது” என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
‘உதயநிதியிடம் 2, 3 வீடுகள் இருந்தும் அரசு பங்களா கேட்டார்’ – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,“உதயநிதியிடம் 2, 3 வீடுகள் இருக்கிறது. ஆனாலும் அரசு பங்களாவில் இருக்கிறார்” என தெரிவித்தார்.
மேலும், அரசு பங்களா வேண்டும் என உதயநிதி தன்னிடம் கடிதம் கொடுத்ததாகவும், வீடு இருப்பதால் பங்களா வழங்க முடியாது எனக் கூற முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அமைச்சர்களுக்கு கார், வீடு, 4 உதவியாளர்கள் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுவதாகவும், ஆனால் எம்.எல்.ஏ.க்களுக்கு கார், உதவியாளர்கள், வீடு உள்ளிட்ட வசதிகள் எதுவும் இல்லை என்றும் ஆதவ் அர்ஜுனா கூறினார்.
‘உதயநிதிக்கு பங்களா வழங்கியது அரசுதானே?’ – கே.என்.நேரு
ஆதவ் அர்ஜுனாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த சட்டமன்ற திமுக துணைத் தலைவர் கே.என்.நேரு, உதயநிதி அமைச்சர் அந்தஸ்தில் இருப்பதால் அரசு பங்களா என்பது அவரது உரிமை என தெரிவித்தார்.
அரசு வீட்டில் இருந்து பணியை கவனிக்க வேண்டும் என்பதற்காகவே அரசு பங்களா வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், “கார் வேண்டாம் என்றுதான் சொல்கிறோம்; அரசுக்கு செலவு வைக்க வேண்டாம் என்கிறோம்” என தெரிவித்த நேரு, தேர்தல் வேட்புமனுவில் உள்ள பொருளாதார விவரங்களை வைத்து கார் வழங்க வேண்டும் என்ற கருத்தை விமர்சித்தார்.
ஆதவ் அர்ஜுனா சொந்த வீட்டில் வசித்தாலும், அதற்கான வாடகையை அரசு வழங்குவதாகக் கூறிய நேரு, அந்த வாடகையை வேண்டாம் என அவரே கடிதம் கொடுக்கலாமே என்றும் கேள்வி எழுப்பினார்.
‘எங்களிடம் கார் உள்ளது; எங்களுக்கு வேண்டாம்’ – கணேஷ் குமார்
செஞ்சி தொகுதி பாமக எம்.எல்.ஏ. கணேஷ் குமார், ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கார் என்பது மிகவும் முக்கியமானது என தெரிவித்தார்.
ஒரு தொகுதியில் 330 ஊராட்சிகள் இருப்பதால் அவற்றை நேரடியாகச் சென்று பார்வையிட வேண்டியுள்ளதாகவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய எம்.எல்.ஏ.க்களுக்கு கார் அவசியம் என்றும் கூறினார்.
அதே நேரத்தில், தன்னிடம் ஏற்கெனவே கார் இருப்பதால் தன்னைப் போன்றவர்களுக்கு புதிய கார் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
‘எங்களுக்கு கார் வேண்டாம்’ – இந்திய கம்யூனிஸ்ட்
தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. தளி ராமச்சந்திரன், சில எம்.எல்.ஏ.க்கள் கார் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகவும், ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை தங்களுக்கு கார் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.
‘யூனியன் சேர்மன்களுக்கு கார் வழங்கப்பட்டது’ – அமைச்சர் ஷாஜகான்
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான், கடந்த காலத்தில் 300-க்கும் மேற்பட்ட யூனியன் சேர்மன்களுக்கு கார் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியிலும் யூனியன் சேர்மன்களுக்கு கார் வழங்கப்பட்டதாகவும், அப்போதும் நிதி நிலைமை இதேபோலத்தான் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
‘எம்.எல்.ஏ.க்களுக்கு செக் பவர் இல்லை’ – கே.என்.நேரு
யூனியன் சேர்மன் பதவி என்பது நிர்வாகப் பதவி என்றும், எம்.எல்.ஏ.க்களின் பணி வேறு என்றும் கே.என்.நேரு விளக்கமளித்தார்.
உள்ளாட்சித் தலைவர்கள் பல்வேறு நிர்வாகப் பணிகளை மேற்கொள்வதுடன், அவர்களுக்கு செக் பவர் இருப்பதாகவும், எம்.எல்.ஏ.க்களுக்கு செக் பவர் கிடையாது என்றும் அவர் கூறினார்.
‘எங்களை வந்து முதலில் பாருங்கள்’ – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எம்.எல்.ஏ.க்களுக்கு செக் பவர் இல்லை என்பதை தாங்கள் ஒப்புக்கொள்வதாக தெரிவித்தார்.
மேலும், “எம்.எல்.ஏ.வை நாங்கள் பார்த்ததே கிடையாது; ஓட்டு கேட்கும்போது தான் வந்தார்கள்” என மக்கள் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு எம்.எல்.ஏ. தனது தொகுதியில் உள்ள 3 லட்சம் மக்களையும் நடந்து சென்று சந்திக்க முடியுமா என கேள்வி எழுப்பிய ஆதவ் அர்ஜுனா, மக்களை நேரடியாகச் சந்திப்பதற்கு எம்.எல்.ஏ.க்களுக்கு வாகனம் அவசியம் என வலியுறுத்தினார்.


